புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் 10 புதிய கல்லூரிகள்
நிதி நிலை அறிக்கையில் உயர்கல்வித்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உயர் கல்வி சேர்க்கையானது மேம்பட்டு காணப்படுகிறது.
தேசிய அளவில் தலைசிறந்த கல்லூரிகள் குறித்து NIRF (National Institutional Ranking Framework) வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழ்நாட்டில் நான்கு கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் உயர்கல்வி குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டில் அரசு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக நிலமும் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 25 அரசு கலை கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக விடுதிகள் கட்டப்படும். உயர் கல்வித் துறைக்கு ரூ.5,369.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட்: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு