கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் மாதம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எரிபொருளின் தேவை வெகுவாகக் குறைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதிமுதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதால் எரிபொருளின் தேவை அதிகரித்து, விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, உள்ளூர் சந்தையில் எரிபொருள்கள் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையை காரணம்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பொதுமக்களிடையே கடும் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர, கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகளும் எரிபொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.