உலகம் முழுவதும் இணையவழித் தகவல் பரிமாற்றச் செயலியாக வாட்ஸ்அப் செயலி 200 கோடிக்கும் மேற்பட்ட பயனளர்களால் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சமீபத்தில் அப்டேட்டில் கொண்டுவந்துள்ள தனிநபர் கொள்கை மாற்றத்தால், நமது தரவுகள் பேஸ்புக்குடன் இணைந்துவிடும் என்ற செய்தி பரவிவந்தது. புதிய கொள்கை மாற்றத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க் உள்பட பலர் விமர்சித்தனர்.
இந்தத் தகவலால் அச்சமடைந்த பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலிக்கு குட்பை சொல்லிவிட்டு ஹைக், டெலிகிராம் பக்கம் திரும்பினர். இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தரவுகளை பேஸ்புக்கில் இணைக்க நாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் புதிய அப்டேட் முழுவதுமாக வணிக ரீதியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். உங்களின் தரவுகள் பேஸ்புக்குடன் பகிர கட்டாயப்படுத்தப் போவதில்லை.
உங்களின் தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தை இந்தப் புதிய கொள்கை பாதிக்காது. எங்களின் கொள்ளைகளை வெளிப்படையாக்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே வணிகப் பயன்பாட்டிற்கு மாறிக்கொள்ளலாம். இது குறித்து ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் அறிவித்திருந்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.