வெள்ளிக்கிழமையான இன்று பெப்ஸி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் விவசாயிகளுக்கான இந்த நிபந்தனை தீர்வை கீழ்வருமாறு அறிவித்தனர்:
தங்களது லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு வகை பதிவு செய்யப்பட்டு காப்புரிமை பெற்ற விதை. அதனை விவசாயிகள் இனி பயிர்செய்யக் கூடாது. மேலும் ஏற்கெனவே பயிர் செய்து விளைவித்த அந்த வகை உருளைக்கிழங்கு இருப்புகளை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பெப்ஸி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி நிறுவனத்திடமிருந்து விதைகளை வாங்கி பயிர் செய்து விளைபொருளை நிறுவனத்திடமே விற்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் இது குறித்துப் பரிசீலிக்க வேண்டும், யோசித்துத்தான் முடிவெடுக்க முடியும் என்று கூற அடுத்த கட்ட விசாரணை ஜூன் 12ஆம் தேதிக்குத் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக பெப்ஸி நிறுவனம் பயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001இன் பிரிவு 64-ஐ தங்களுக்குச் சாதகமாக்கி நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆனால் விவசாயிகள் இதே சட்டம் 39ஆம் பிரிவைச் சுட்டிக்காட்டி விதைகளைச் சேமித்து, பயன்படுத்தி, மறுபயிர் செய்து, பரிமாற்றம் செய்து, விற்பனை செய்து கொள்ள உரிமை உள்ளது என்று கோருகிறது. அதாவது பிராண்டட் விதையை விற்காமல் இப்படிச் செய்து கொள்ளச் சட்டம் அனுமதிக்கிறது என்கிறது விவசாயிகள் அமைப்பு. உலக வர்த்தக அமைப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில் இது போன்ற வழக்கு முதல்முறையாகும். எனவே இதில் தவறாக முடிவெடுத்தால் அது இந்தியாவில் உள்ள பிற விவசாயிகளையும் மிக மோசமாகப் பாதிக்கும், வாழ்வாதாரங்கள் பறிபோகும் என்று விவசாயிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.