இஸ்லாமாபாத்: பாசுமதி அரிசி, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் சொந்தம் என, பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
பிரியாணி முதல் புலாவ் வரை பல்வேறு உணவு வகைகள் பாசுமதி அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
உலகளவில் அரிசி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் இந்தியா, அதன் மூலம் ஆண்டுதோறும் 6.8 பில்லியன் டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி) ஈட்டுகிறது.
அரிசி ஏற்றுமதியில் நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டுகிறது. உலகில் இந்த இரு நாடுகள் மட்டுமே பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.
இச்சூழலில் பாசுமதி அரிசிக்குப் புவிசார் குறியீடு கோரி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியா விண்ணப்பித்திருந்தது. இந்தியாவின் விண்ணப்பத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசும் கோரிக்கை வைத்தது.
பாகிஸ்தான் - இந்தியா ஆகிய நாடுகளின் பஞ்சாப் எல்லையில் மட்டுமே பாசுமதி அரிசி விளைவிக்கப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த பாசுமதி பிரச்னைக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியம், இரு நாடுகளுக்கு கால அவகாசம் அளித்திருந்தது. மேலும், பேச்சுவார்த்தை மூலம் இதற்கு சுமூக தீர்வு காணவும் பரிந்துரைத்தது.
அதன்படி, இரு நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் குழுவும், அரசு செயலாளர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.