டெல்லி: எம்.எஸ்.எம்.இ அவசர கால கடனளிப்பு உத்தரவாத திட்டம் (இ.சி.எல்.ஜி.எஸ்) நவ30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அவசர கால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் அறிமுகம் மூலம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் நிதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவியாக பல்வேறு துறைகளுக்கு, குறிப்பாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) கடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே மாதம் அறிவித்த ஆத்மநிர்பார் பாரத் அபியான் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் காலம் அக்டோபர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதத்துக்கு என நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், இதனை கருத்தில் கொண்டும், பண்டிகை காலங்களின் தேவையை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈ.சி.எல்.ஜி.எஸ் போர்ட்டலில் உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள் பதிவேற்றிய தரவுகளின்படி, இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 60.67 லட்சம் கடன் வாங்குபவர்களுக்கு ரூ .2.03 லட்சம் கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரூ .1.48 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், எம்.எஸ்.எம்.இ.க்கள், வணிக நிறுவனங்கள், வணிக நோக்கங்களுக்காக தனிநபர் கடன்கள் மற்றும் முத்ரா கடன் வாங்குபவர்களுக்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் இணை இல்லாத கூடுதல் கடன் 2020 பிப்ரவரி 29 ஆம் தேதி நிலுவையில் உள்ள கடனில் 20 சதவீதத்திற்கு வழங்கப்படுகிறது.