கொரோனா தொற்று காரணமாக, ஜனவரி - மார்ச் காலாண்டில் ஐபோன்களின் விற்பனை பாதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தனது முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "முதலீட்டாளர்களுக்கு முன்பு உறுதி அளித்திருந்த லாபத்தை, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் எங்களால் இந்தக் காலாண்டில் ஈட்ட முடியாமல் போய்விட்டது.
சீனா முழுவதும், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைவிட, மெதுவாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, முதல் காலாண்டில் எங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியவில்லை.
சர்வதேச அளவிலும் ஐபோன் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்திலுள்ள ஐபோன் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டாலும், அவை முழு வீச்சில் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. சீனாவிலுள்ள எங்கள் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.