கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகளை மீட்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் தற்சார்பு இந்தியா என்ற பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நுகர்வோர் நம்பிக்கை ஜூலை மாதம் மேம்பட்டுள்ளதாக ரீஃபினிட்டிவ்-இப்சோஸ் முதன்மை நுகர்வோர் உணர்வுக் குறியீட்டில் (Refinitiv-Ipsos Primary Consumer Sentiment Index) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை மாத்திற்கான இந்திய நுகர்வோர் உணர்வுக் குறியீடு 2.6 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், இந்தக் குறியீடு 0.4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நுகர்வோர் உணர்வுக் குறியீடு ஏப்ரல், மே மாதங்களில் பெரும் சரிவைச் சந்தித்திருந்தது.
அதேபோல பி.சி.எஸ்.ஐ.-இன் வேலைவாய்ப்பு நம்பிக்கை குறியீடு 0.7 விழுக்காடும், பொருளாதார எதிர்பார்ப்பு குறியீடு 4.9 விழுக்காடும் உயர்ந்துள்ளது. மேலும், பி.சி.எஸ்.ஐ.-இன் முதலீட்டு நம்பகதன்மை குறியீடு 2.1 விழுக்காடும் தனிப்பட்ட நிதி நிலைமைகளுக்கான குறியீடு 2.2 விழுக்காடும் அதிகரித்துள்ளது.