வாராக்கடன் பிரச்சினையாலும், நிதி நெருக்கடியாலும் சிக்கித் தவித்த தனியார் துறை வங்கியான யெஸ் வங்கியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. 30 நாட்களுக்கு வங்கி நடவடிக்கை முழுவதையும் ரிசர்வ் வங்கியே கையாளும் எனவும், வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இதனால் அவ்வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது. வங்கி விரைவில் திவால் ஆகிவிடும் என்று அஞ்சிய வாடிக்கையாளர்கள், தங்களது டெபாசிட் தொகையை எடுக்கத் தொடங்கினர். ஆனால், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துவைத்துள்ள பணத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உறுதியளித்தன.