மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி வணிக மேம்பாட்டிற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முழுமையாக முடித்த 15 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.38,088 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர பிரதேசம், அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஓடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னரே முடித்திருந்தன. தற்போது இந்தப் பட்டியலில் குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் இணைந்ததை அடுத்து மொத்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
வணிக நடவடிக்கைகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க மாவட்டவாரியாக உரிய கட்டமைப்பு வைத்திருத்தல், ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் அமல்படுத்துதல், உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்த நடவடிக்கை, மின்சக்தி துறையில் சீர்திருத்தம் என நான்கு சீர்திருத்த நடவடிக்கைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலக்காக நிர்ணயித்தது. இதில் வணிக நடவடிக்கை சீர்திருத்தத்தை 15 மாநிலங்கள், ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தை 13 மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தத்தை 6 மாநிலங்கள், மின்சக்தி துறை சீர்திருத்தத்தை 2 மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளன. மேற்கண்ட மாநிலங்களுக்கு ரூ. 86,417 கோடி கூடுதல் கடன்தொகை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க:சாம்சங் புதிய கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்