தமிழ்நாடு

tamil nadu

'மக்களின் ஒத்துழைப்பிருந்தால் கரோனாவை விரட்டிவிடலாம்' - அமைச்சர் செல்லூர் ராஜூ

By

Published : Jun 27, 2020, 5:58 PM IST

மதுரை: மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் அதிவிரைவில் கரோனாவை மதுரையிலிருந்து விரட்டிவிடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மக்களின் ஒத்துழைப்பிருந்தால் கரோனாவை விரட்டிவிடலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
மக்களின் ஒத்துழைப்பிருந்தால் கரோனாவை விரட்டிவிடலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை அனுப்பானடி பகுதியில் ஏழை, எளிய மக்களுக்குக் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ”பொருளாதார நடவடிக்கையின் பொருட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கரோனா வைரஸ் தொற்று மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வந்த நபர்களால் மதுரையில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. மதுரையைப் பொறுத்தவரை, மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம், பரவை ஊராட்சிகள், கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில்தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காரணம் இந்தப் பகுதிகளில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வருகின்ற 30ஆம் தேதிக்குப் பிறகு இதன் தாக்கம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்த்துவதா என்பதை அரசு முடிவுசெய்யும். முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். தற்போதைய கரோனா தாக்கத்திற்காக யாரும் கவலைகொள்ள வேண்டியதில்லை. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுவருகின்றன.

மதுரை மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ள அலோபதி, ஹோமியோபதி, சித்த மருந்துகளை உரிய முறையில் அனைவரும் உட்கொள்ள வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றில் வருகின்ற செய்திகளைப் பார்த்து அச்சம் கொள்ளக்கூடாது.

மூச்சுப் பயிற்சி, யோகா ஆகியவற்றை நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பது அவசியம். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால், மதுரையிலிருந்து கரோனாவை அதிவிரைவில் விரட்டிவிடலாம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details