ஒடிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் இறந்து கிடந்தன. இந்த யானைகள் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது என வனத்துறை அலுவலர்கள் இன்று (ஜூன் 15) தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில்; 'குருபேடா பகுதிக்கு அருகில் பைதரணி என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் பெண், ஆண் என்ற இரண்டு யானைகளின் உடல்கள் நேற்று (ஜூன் 14) வனத்துறை அலுவலர்களால் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆன அந்தப் பெண் யானைக்கு 20 வயது இருக்கும். அருகில் உயிரிழந்து மூன்று நாட்கள் தான் ஆன நிலையில் இருந்த, ஆண் யானைக்கு 22 வயது இருக்கும். மேலும் அந்த ஆண் யானையின் உடலில் தந்தங்கள் காணப்படவில்லை. இதுகுறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தந்தங்கள் காணாமல் போனதை வைத்துதான், யானை வேட்டைக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளது என முடிவு செய்தோம். உடற்கூறாய்வு முடிந்த பிறகே அடுத்த கட்ட விசாரணையில், அடுத்த கட்டக் காரணம் குறித்து கண்டறிய முடியும்' எனத் தெரிவித்தனர்.