திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பூந்தமல்லி மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் குன்றத்தூர், முருகன் கோயில் பின்பகுதியில் உள்ள குளத்தின் அருகே சந்தேகத்திற்கிடமாக மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் வலுத்த காவலர்கள் அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், குன்றத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்த நாகு (எ) நாகராஜ்(21), கார்த்திக்(37), மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பதும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.