சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் காவல் துறையின் அத்துமீறலைக் கண்டித்து நாளை (ஜூன் 26) தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்திற்கும், 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கும் போராட்டத்திற்கும் தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் மருந்து வணிகர்களும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சேலத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் கே. கே . செல்வன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,"சாத்தான்குளம் இரட்டைக்கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவம் இனி எந்த காலத்திலும் நடக்கக்கூடாது. அதற்குக் காரணமான காவல் துறையினரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ஜெயராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதியாக தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் தொகை போதாது.
அவர்களுக்கு இரண்டு கோடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.