கரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்டம் 1974இன்படி ஆண்டு வரி ஏப்ரல் 10ஆம்தேதியும், காலாண்டு வரி மே 15ஆம் தேதியும் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஏற்படும் சிரமங்களை கருத்தில்கொண்டு, ஆண்டு வரி, காலாண்டுக்கான அனைத்து வகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றி செலுத்த ஜூன் 30ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏற்கனவே மேற்படி வாகனங்களுக்கான வரிகளை செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதிவரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மேற்படி வாகனங்களுக்கான வரிகள் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதிவரை கால நீட்டிப்பு கொடுப்பதற்கான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் எனத் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.