கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மூன்று ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் கிசான் நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், விவசாயிகள் அல்லாதோர் பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக புகார்கள் வந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 110 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், " சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலீப் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 எஸ்பிகள், 6 டிஎஸ்பிக்கள், 18 ஆய்வாளர்கள் இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், துறை அலுவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 குற்றவாளிகளை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி, தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 044-2851 3500 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 94981 81035 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும், cbcid2020@gmail.com என்ற இ - மெயில் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம்.
குறிப்பாக சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் எனத் குறிப்பிட்டுள்ளது.