தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கேரளாவைப் போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று தனித்துறை - மு.க. ஸ்டாலின்

சென்னை : கேரள அரசில் இருப்பது போல அடுத்துவரும் திமுக ஆட்சியில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கென தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளாவைப் போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று தனித்துறை - ஸ்டாலின்
கேரளாவைப் போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று தனித்துறை - ஸ்டாலின்

By

Published : Jul 2, 2020, 10:45 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகை அச்சுறுத்தும் கரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பில் உள்ளனர். வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் தாயகம் திரும்புவதற்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களைத் திரும்ப அழைப்பதற்கான முயற்சிகளில் மாநிலத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை என்பதை அங்குள்ள தமிழர்கள் காணொலி - மின்னஞ்சல் - சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வேலை பார்ப்போரும் தமிழர்கள்தான். பேரிடர் சூழலில் வேலையும் பாதிக்கப்பட்டு அவர்கள் பரிதவிப்பதால், அவர்களின் குடும்பத்தார் இங்கே பரிதவிக்கிறார்கள். இருதரப்பின் நிலையையும், உணர்வையும் புரிந்துகொள்ளக்கூடிய சூழலில் மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் இல்லையோ எனச் சந்தேகம் எழுகிறது.

மேலும், வெளிநாடுகளில் வாழும் மலையாளம் பேசும் மக்களுக்காக கேரள மாநில அரசு ஒரு தனித்துறையை உருவாக்கி, அவர்களின் நலன் காப்பதில் முன்னணியில் இருக்கிறது. திமுக கடந்த தேர்தல் அறிக்கையிலேயே வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தது.

ஜனநாயக முறைப்படி வெகுவிரைவில் திமுக அரசு அமையும்போது அத்தகைய துறை உருவாக்கப்பட்டு, அயலகத் தமிழர் நலன் முழுமையாகக் காக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details