திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தவறான முறையில் பணத்தை பெற்று வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பயனாளிகள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்று மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் மோசடி நடைபெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், கலசபாக்கம், ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட 18 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று வருகின்றனர்.
இதனை விவசாயிகள் அல்லாதவர்களும் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் முறைகேடாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போலி பயனாளிகள் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாயிகளைப் போல் பெற்று அரசாங்கத்தை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் ஈடுபட்டு விவசாயிகள் அல்லாதவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துள்ளனர்.
பிரதமர் பெயரில் வழங்கப்படும் இந்த நிதித்திட்டத்தின் நிதி, உரிய விவசாயிகள் பலருக்கு சென்று சேராத நிலையில் முறைகேடான முறையில் பலர் அனுபவிப்பது விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.