இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு பள்ளிக்கல்வித்துறை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, "கரோனா தொற்றின் கோரப் பிடியில் தமிழ்நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர், விடுதி மாணவர், சிறப்புப் பள்ளிகளின் மாணவர் அனைவரும் கல்வி கற்றலை இழந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
அத்துடன் அடிப்படை ஆதாரமான உணவையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பள்ளி, விடுதி மாணவர் கடந்த இரண்டரை மாதங்களாக அரைப் பட்டினியில் வெதும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனை மாதங்கள் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல இயலாது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் சமுதாயத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவரது பெற்றோர் தினக்கூலிக்கு உழைப்பவர்கள். இந்த ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வேலையிழந்து, கொடிய வறுமையில் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வயிறார உணவு அளிப்பது சிரமாகி உள்ளது. மதியம் கொடுக்கப்படும் சத்துணவு ஒன்றுதான் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து. ஆண்டு முழுவதும் கிடைக்கும் சத்துணவுதான் இந்த குழந்தைகளின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரம். அது மறுக்கப்பட்டதென்றால், தமிழ் நாட்டின் லட்சோப லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து இன்மையால் கடும் பாதிப்புக்கு உள்ளாவர். மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உடைய ஒரு தலைமுறை உருவாகும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைக் காலத்தில் பாடநூல்கள் வழங்கவும், இணைய வழி வகுப்புகள் நடத்தவும் தமிழ்நாடு அரசு போதுமான அக்கறை காட்டி வருகிறது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் நேரடியாக உணவுக்கான பொருள்களை வழங்க உரிய ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. ஆனால், சுமார் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்புத் திறன் வளரவும் உரிய அக்கறை காட்டாமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இது குறித்த சிந்தனையே தமிழ்நாடு அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண நாட்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் அனைத்தும் தற்போது அளிக்கப்பட வேண்டும். இதில் சத்துணவுடன், வைட்டமின் மாத்திரைகள், குடற்புழு நீக்க மாத்திரைகள், சானிடரி நாப்கின் ஆகியவையும் அடங்கும். பள்ளிகள் மூடி இருக்கும் நேரத்தில் உணவு சமைத்து வழங்குதல் கடினமாக இருக்கலாம். சாப்பிட வரும் குழந்தைகளிடையே தொற்று பரவாமல் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படி என்றால், அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, முட்டைக்குத் தேவையான பணமும் பெற்றோரிடம் கொடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் அறிவுறுத்தலையும், நிதி ஒதுக்கீட்டையும் ஒட்டி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு இத்தகைய முறையைப் பின்பற்றி, வாரம்தோறும் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாட்டை ஏற்கனவே செய்திருக்கும் தமிழ்நாடு அரசு, மற்ற குழந்தைகளுக்கு அதே ஏற்பாட்டை செய்ய எவ்வாறு தவறியது என்பது புரியவில்லை. எனவே, இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்". இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.