ஈரோடு மாவட்ட காவல் துறையினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் போக்குவரத்துக் கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் நாயர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்போது பேசிய அவர், ஊரடங்கினால் காவல் துறையினருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கரோனா தொற்று காலத்தில், சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து காவல் அலுவலர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் கரோனா தடுப்புப் பணிகள், காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்களை எவ்வாறு கையாள்வது என விரிவாக எடுத்துக்கூறினார்.
புகார் தெரிவிக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களை நல்ல முறையில் ஒத்துழைப்புக் கொடுத்து அவர்களது புகார்களை கனிவுடன் கேட்டு குறைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
காவல் துறையினர் பொதுமக்களிடம் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்; நெருக்கடியான காலத்தில் காவல் துறையினர் பொதுமக்கள் மத்தியில் நல்மதிப்பு உயரும் வகையில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் எனவும் பல அறிவுரைகள் வழங்கினார்.