சமீபகாலமாக வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேவருகிறது. தற்போதுவரை 1,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று அதிகமாவதற்கு காரணம் சென்னையிலிருந்து திரும்பியவர்கள் என்றும் வேலூர் மொத்த காய்கறி வியாபார சந்தையான நேதாஜி சந்தை என்றும் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
இதனால் நேதாஜி சந்தை மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டது. இதற்குப் பதிலாக கொணவட்டத்தில் உள்ள மாங்காய் மண்டியில் தற்காலிகமாக மொத்த வியாபார காய்கறிச் சந்தை செயல்படும் என கூறப்பட்டது.
இன்று காலை முதல் மாங்காய் மண்டியில் மொத்த காய்கறி தற்காலிக சந்தை செயல்பட துவங்கியது. ஆனால் இங்கு பொதுமக்களும், வியாபாரிகளும் சிறிதும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
சந்தையில் மக்கள் கூட்டமும், சரக்கு வாகனங்களும் அதிகமாக காணப்பட்டதால் கொணவட்டம் சாலையில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர்.
வேலூர் நேதாஜி சந்தையில் இதுவரை 115 வியாபாரிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் அங்கு சந்தை மூடப்பட்டு, தற்போது மாங்காய் மண்டியில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது.
இங்கும் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அளவுக்கு அதிகமாக கூடுவதால் நோய்த்தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக மாங்காய் மண்டியில் மொத்த காய்கறி சந்தை வருவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.