மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும்.
மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் ஒரு அமைப்பு மட்டுமே, இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆயிரத்து 580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது.
இடஒதுக்கீடு வழங்காததால் இரண்டு ஆயிரத்து ஏழு நூறுக்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான இடம் பறிபோகியுள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு திருடி கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை இருக்கும் போது, மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறான நடைமுறையாகும். தமிழ்நாட்டில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்கள் உள்ளனர்.