திருவள்ளூர் மாவட்ட அதிமுகவில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் ஐந்து மாவட்டச் செயலாளர்களைத் தலைமைக் கழகம் அறிவித்தது.
அதன்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா நியமிக்கப்பட்டார்.
அதனையடுத்து கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கவும் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் இன்று திறந்துவைத்தார். இதையடுத்து, அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அதிமுகவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை ஆகியவற்றில் அதிகளவில் உறுப்பினர்களைச் சேர்த்து வருகிற 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பென்ஜமின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்து-வருகிறார்.
அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வருகைதர இருப்பதால் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். சென்னையில் தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை சுவரொட்டி, சுவரம் விளம்பரம் மூலம் வரவேற்பைத் தெரிவிக்க வேண்டும்.
அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வந்து வரவேற்பு கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளர் கோ. ஹரி, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் செவ்வை சம்பத்குமார், ஒன்றிய, பேரூர், நகர கழக அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.