நாகை மாவட்டம் அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அகிலா (27) என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, ஆறு வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
ஐயப்பனின் குடிப்பழக்கத்தின் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது அகிலா, கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும் பின்னர் அவர்கள் சமாதானம் செய்து திருப்பி அனுப்புவதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றி காலை வீட்டில் அகிலா மயக்கமடைந்து கிடப்பதாக ஐயப்பனின் குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அகிலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் துறையினர் ஐயப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஐயப்பனை கைது செய்த குத்தாலம் காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.