கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் வெளிவந்த யூடியூப் சேனலில் முருகன் உள்ளிட்ட இந்து கடவுள்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் இந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சியினர், பாஜகவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்தச் சூழலில் திருநெல்வேலி மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு இன்று கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தென் மண்டலச் செயலாளர் ராஜாபாண்டியன், மாவட்டத் தலைவர் உடையார் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவைச் செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோரைக் கைதுசெய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
மேலும் பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து கறுப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் வகையில் கறுப்புச் சட்டையைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்து காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 26 பேரைக் கைது செய்தனர்.