தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2020, 8:25 PM IST

ETV Bharat / briefs

விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

மதுரை: விவசாயி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தது வருத்தத்திற்குரிய விவகாரம், விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, துன்புறுத்தப்படக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

 High Court Madurai Branch
High Court Madurai Branch

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரெத்தினம் செட்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்

அந்த மனுவில் கூறியிருந்ததாவது, "திருவண்ணாமலை பகுதியில் உள்ள எனது சொந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தேன். நெற்பயிர்களை அறுவடை செய்தபின், நெல் மூடைகளை விற்பனை செய்ய முடிவு செய்தேன். அப்போது, தஞ்சாவூர் பகுதிக்கு நெல் மூடைகளை கொண்டுச் சென்று விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற தகவலை அறிந்தேன்.

அதன்படி, எனது நிலத்தில் விளைந்த 256 நெல் மூடைகளை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு தஞ்சையை நோக்கி சென்றபோது அந்த லாரியில் சந்தேகத்துக்கு இடமாக நெல் மூடைகள் கொண்டு வருவதாக சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் எண்ணியுள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் அந்த லாரியை சிறைபிடித்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்தது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

என்னுடைய விளைநிலத்தில் விளைந்த நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மட்டுமே தஞ்சாவூருக்கு கொண்டுச் சென்றேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. எனவே, இது தொடர்பான வழக்கை ரத்து செய்து, லாரியையும், நெல் மூடைகளையும் விடுவிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையில் மனுதாரர் விவசாயி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்தது வருத்தத்திற்குரிய விவகாரம். விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமே தவிர, துன்புறுத்தக்கூடாது. பொதுமக்களுக்கான அரிசியை மனுதாரர் கடத்தவில்லை என்பது விசாரணையில் உறுதியாகிறது.

எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். வாடகை வாகனத்தையும், நெல் மூட்டைகளையும் தாமதமின்றி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சூப்பர் ஸ்டார் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details