சென்னை, புழல் சிறையில் காவலராகப் பணியாற்றிய காவலர் இன்பரசு செங்கல்பட்டு அருகே நேற்று (செப்.28) பட்டப் பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்யப்பட்ட காவலரின் உடலை மீட்டு காவல் துறையினர் வழக்குபதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று (செப்.29) காவலர் இன்பரசு கொலை வழக்கில் தொடர்புடைய செந்தில், ராஜதுரை, வரதராஜ், ஜான்சன், விக்னேஷ் ஆகிய ஐந்து பேர் தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸ் செபாஸ்டியன் முன்பு சரணடைந்தனர்.
இதையடுத்து, அவர்களை விசாரித்த நீதிபதி, காவலர் கொலை வழக்கில் சரணடைந்த ஐவருக்கும் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர், சரணடைந்த ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.