நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அன்னப்பன்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் தெருவில் வசித்த இரண்டு பெண்கள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக கடந்த 20ஆம் தேதி கிராம கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம நாட்டாமை மற்றும் பஞ்சாயத்தார்கள் மகாலிங்கம், நடராஜன், சத்யராஜ், ஜெயராமன், ராயல் குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இரு பெண்களின் பெற்றோர்களுக்கும் தலா ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அகோரம் என்பவர், காதல் திருமணம் செய்த பெண்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும், மாறாக அவர்களது பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது சரியில்ல” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அக்கிராமத்தை சேர்ந்த சிலர், அகோரம் அவரது சகோதரர் ஜெய்சங்கரின் மகன் பிரதீப் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அகோரம், பிரதீப் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.