ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் ஆட்சியர், காவல் ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர், காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக கடந்த 7ஆம் தேதி காவல் ஆய்வாளர் கோபிநாத்திற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் பூரண குணமடைந்து இன்று (செப்டம்பர் 3) பணிக்குத் திரும்பினார். இந்நிலையில் மாவட்டக் காவல்துறை, காவல்நிலையம், பொதுமக்கள் ஆகியோர் சார்பில் காவல் ஆய்வாளருக்கு எவ்வித பாதிப்புமின்றி நல்ல முறையில் குணமடைந்து திரும்பியதற்கும், சிறப்பான பணியை தொடர்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
மாநகர துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், காவல் ஆய்வாளர் கோபிநாத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருக்கு காவல்துறையினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மேளதாளங்கள் முழங்க பூக்களைத் தூவியபடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.