இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 12ஆவது லீக் போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் மொர்டோசா முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பெயர்ஸ்டோவ் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர்.
இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 128 ரன்களை சேர்த்த நிலையில், பெயர்ஸ்டோவ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜோ ரூட் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இங்கிலாந்து வீரர் ராய், வங்கதேச அணியின் பந்துவீச்சாளரை பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ராய் தொடர்ந்து, அதிரடியாக ஆடிய அவர், மெஹதி ஹசன் வீசிய 35ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளை சிக்சராக பறக்கவிட்டு 150 ரன்களை விளாசினார். அதைத்தொடர்ந்து, நான்காவது பந்தையும் சிக்சர் அடிக்க முயன்ற ராய், 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில், 14 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, அதிரடியாக ஆடிய பட்லர் (64), மோர்கன் (35) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், கிறிஸ் வோக்ஸ், லியாம் ப்ளன்கட் ஆகியோரும் தங்களது பங்கிற்கு வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தனர்.
இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்களை குவித்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 28 பவுண்டரிகள், 14 சிக்சர்களை விளாசியுள்ளது. வங்கதேசம் அணி தரப்பில் முகமது சைஃபுதீன், மெஹதி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.