தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வரதட்சணை கொடுமை: காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

தேனி: பெரியகுளம் அருகே வரதட்சணை கொடுமையால் காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Police officer wife commits suicide
Police officer wife commits suicide

By

Published : Jul 3, 2020, 8:32 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் குணசேகரன். ஊட்டியில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மகள் சங்கரிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 4ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு வயதில் ஆண்குழந்தை உள்ளது. இதனிடையே வரதட்சனை பிரச்னையால் சங்கரியை அவரது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பெண்ணின் பெற்றோர் கூறுகையில், "கொத்தனார் வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் தங்களால் இயன்றளவிற்கு 27 சவரன் நகை போட்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்.

இந்நிலையில் மாப்பிள்ளை காவல் துறையில் அரசுப்பணியில் இருப்பதை காரணம் காட்டி 100சவரன் நகை வேண்டும் என வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். மேலும் ஊட்டியில் குணசேகருடன் பணிபுரியும் பெண் காவலரை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதற்கு காரணமான குணசேகரன், அவரது பெற்றோர் தங்கமணி, போதுமணி, சகோதரி குமுதா ஆகிய 4 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இது தொடர்பாக தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துணை கண்காணிப்பாளர், பெரியகுளம் துணை ஆட்சியர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details