திருவள்ளூர் அடுத்த வெங்கல் காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் கரிகளவாக்கம் கிராமத்தில் அண்மையில் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சில வீடுகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கரிகளவாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர், அரசு தோப்பு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக விற்பதாக, வந்த தகவலையடுத்து வீடுகளை இழந்த மக்கள் தலைவரிடம் சென்று தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் நீங்கள் யாரும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை; ஆகையால் உங்களுக்கு இடம் தர முடியாது' எனப் பதில் சொன்னதாகக் கூறப்படுகிறது. வீடுகளை இழந்தவர்கள் அந்த கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தன்னிச்சையாக சென்று குடிசைகளை அமைக்க முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரடியாக சென்று பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தை தூண்டிவிட்டதாக முன்னாள் தலைவர் வீடு மற்றும் அவரது வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதில் மொத்தம் 8 பேர் காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.