மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்காக 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது. நோய்த்தொற்று குறைவாக இருந்த காலக்கட்டத்தில் கரோனா பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அனுமதிக்கப்பட்டுவந்தனர்.
ஆனால் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள், தனியார் கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
ஜூன் 15ஆம் தேதி மட்டும் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளைச் சேர்ந்த 28 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இதுவரை 53 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு மயிலாடுதுறை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.