புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குள்பட்ட பல பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மரப்பாலம் சிக்னல் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனம் திருடிய ரமணா என்ற இளைஞரைக் கைதுசெய்தனர்.
பின்னர், கைதுசெய்யப்பட்ட அந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, முதலியார்பேட்டை காவல் துறையினர் இளைஞரைத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு தப்பியோடிய கைதி ரமணா மீண்டும் கோவிட் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவல் துறையினரிடம் சரணடைந்தார்.
பின்னர், அவருக்கு கதிர்காமம் அரசு கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த ரமணாவுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து பரிசோதனைக்குள்படுத்தும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, காவல் துறையினர் கூறும்போது, ரமணாவுக்கு கரோனா தொற்று இருந்ததால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.