இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும் என்று ஏப்ரல் 16ஆம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்து வருகிறோம் என்றும், தேவையான நிவாரணங்களைச் செய்து வருகிறோம் என்றும், குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகம் என்றும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக் குறைவு என்றும், தனது கரோனா தோல்வியை திசை திருப்பிடும் நோக்கில், கதை கதையாக அளந்திருக்கிறார்.
நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறோம் என்றால், தமிழ்நாட்டில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்குத் தொற்று ஏற்பட்டது எப்படி? நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 விகிதம் பேர் இன்னமும் சிகிச்சை நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதோ இந்தியாவிலேயே இது இமாலயச் சாதனையை செய்தது போல முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார். உயிரிழப்புகள் குறைவு என்று முதலமைச்சர் தனக்குத் தானே பெருமை பாராட்டிக் கொள்வது ஈவு இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு.
173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல், இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரியுமானால், அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாகத் தாக்கியிருக்கிறது என்று தான் பொருள். மாவட்ட வாரியாக பரிசோதனை, டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அதிமுக அரசுக்கு ஏன் இந்த மயான அமைதி? பரிசோதனை மட்டுமல்ல; மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கும் உள்ளது.
ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வென்டிலேட்டர்கள் வெறும் 560தான். ஆனால், அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உள்ளது. ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது என்று கூறிய அரசுக்கு, வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்?.
ஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல்; இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.