ஈரோடு மாவட்டம், அசோகபுரம் சுண்ணாம்பு ஓடைப் பகுதி அருகேயுள்ள ரோஜா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேவதியும் தனது கணவருக்கு உதவியாக மளிகைக் கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி வியாபாரத்தைப் பார்த்து விட்டு கணவர் உணவருந்தி கடைக்கு வந்த பிறகு வீட்டிற்குச் சென்ற ரேவதி தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வந்த மூன்று பேர் தங்களை புட்செல் காவல்துறை பிரிவிலிருந்து வந்ததாகவும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான ஹான்ஸ், பான்பராக் ஆகியவற்றை வீட்டில் பதுக்கி வைத்து கடையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் வந்திருப்பதாகவும், அதன் பேரில் சோதனையிட வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேரும் வீட்டின் பீரோ உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, ரேவதி தனது கணவருடன் பேசிக்கொள்வதாகக் கூற அதற்கு அந்த மூவரும் சோதனை செய்வதற்காக கடையில் காவல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனையிட்ட அவர்கள் படுக்கையறையில் கட்டிலுக்கு கீழேயிருந்த சூட்கேஸை சோதனையிட்ட போது அதிலிருந்த 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர். பின்னர் ரேவதியிடம் வீட்டு முகவரி மற்றும் மளிகைக்கடை முகவரியை கேட்டு எழுதிக் கொடுக்கச் சொல்லி சென்று விட்டனர்.
அதையடுத்து, தனது கணவரை அழைத்து பேசியபோது அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருப்பதாகக் கூற, வந்து சென்றவர்கள் தன்னை காவல்துறையினர் என்று சொல்லி நூதன முறையில் பணத்தை அபகரித்துச் சென்றதையும் உணர்ந்த ரேவதி இது குறித்து கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போலி புட்செல் காவல்துறையினரை தீவிரமாக தேடினர். இந்நிலையில், கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் மூவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மூவரும் புட்செல் காவல்துறையினராக நடித்து ஏமாற்றி பணம் பறித்ததும், இதேபோல் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் காவல்துறையினர் என்று கூறி பணத்தைப் பறித்துள்ளதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, போலி புட்செல் காவல்துறையினராக நடித்து சோதனை என்கிற பெயரில் சட்டவிரோதமாக வீட்டில் சோதனையிட்டு பணத்தை பறித்த குற்றத்திற்காக மூவரும் கைது செய்யப்பட்டனர்.