வீட்டிலிருந்தபடியே உணவகங்களிலிருந்து உணவை வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஸ்விகி, சொமாட்டோ ஆகிய செயலிகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்வது கரோனா காலத்தில் புதிய உச்சத்தை அடைந்தது. அதில், உணவை ஆர்டர் செய்துவிட்டு நாமே சென்று அதனை வாங்கி கொள்ளலாம் அல்லது அவர்களே வீட்டிற்கு வந்து டெலிவரி செய்வார்கள்.
உணவை ஆர்டர் செய்துவிட்டு நாமே சென்று அதனை வாங்குவதற்கும் சொமாட்டோ நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை உணவகங்களிடமிருந்து வசூல் செய்துவந்தது. இந்நிலையில், இனி அந்த தொகை வசூலிக்கப்படாது என சொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. செயலி மூலம் ஆர்டர் செய்வதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஆர்டர் செய்து விட்டு உணவகங்களில் சென்று பார்சலை வாங்கும் பட்சத்தில் உணவகங்களிடமிருந்து இனி எந்த விதமான கமிஷன் தொகையும் வசூலிக்கப்படாது. கடந்த சில மாதங்களில், உணவை ஆர்டர் செய்துவிட்டு உணவகங்களுக்கு சென்று அதனை வாங்குவோரின் எண்ணிக்கை 200 விழுக்காடு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து, 13 கோடி ஆர்டர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கூறுகையில், "ஏற்கனவே, 55,000 உணவகங்கள் இந்த சேவையை செய்துவருகிறது. ஒரே வாரத்தில் மட்டும், இதுபோல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் குவிகிறது. எனவே, உணவகங்களுக்கு உதவும் வகையில், இந்த தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார்.