ஹைதராபாத்:உலகெங்கிலும் உள்ள மருந்தாளர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளுநர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ அறிவியல் துறையில், மருந்தாளுநர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுபடுத்தும் வகையில் உலக மருந்தாளுநர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மருந்தாளர் என்பவர் ஒரு சுகாதார நிபுணர் ஆவர். அவர், மருந்துகளை சேமித்தல், கையாளுதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர். மருத்துவர்களை போலவே மருந்தாளர்களும் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
உலகளவில், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர் (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) வகிக்கும் பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி (இன்று) உலக மருந்தாளுநர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பால் (FIP) தொடங்கப்பட்டது.
FIP என்பது சர்வதேச மருந்து கூட்டமைப்பாகும். இது மருந்தியல், மருந்து அறிவியல் மற்றும் மருத்துவ கல்விக்காக உலகம் முழுவதும் செயல்படக் கூடிய அமைப்பாகும். 2009ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த கூட்டத்தின் போது மருந்தாளுநர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பணிகளை வெளிப்படுத்தவும் இந்த செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளுநர் தினத்தை கொண்டாடுவது என FIP கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.