மந்தமர்ரி:தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள மந்தமர்ரி பகுதியில் மகேஸ்வரி (22) என்ற இளம்பெண் தன் பாலின ஈர்ப்பாளர் நண்பர் அஞ்சலி (21) என்பவரை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மஞ்சேரியல் போலீசார் கூறுகையில், மந்தமர்ரியை சேர்ந்த மகேஸ்வரி-அஞ்சலி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இவர்களது நட்பு நாளடைவில் தன் பாலின உறவாக மாறியது. இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி மஞ்சேரியல் பகுதியிலேயே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுடன் மகேஸ்வரியின் சகோதரி பரமேஸ்வரி மற்றும் சகோதரர் விக்னேஷ் ஆகியோரும் இருந்தனர். இந்த 2 ஆண்டுகளாக அஞ்சலி உள்ளூரில் உள்ள ஒரு துணிக் கடையில் பணி புரிந்து வந்தார். மகேஸ்வரி பெட்ரோல் பங்கில் பணி புரிந்து வந்தார்.
இதனிடையே மகேஸ்வரிக்கும் மஞ்சேரியலில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீனிவாஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் மூலம் ஸ்ரீனிவாஸ் அஞ்சலி உடனும் நெருங்கி பழக ஆம்பித்துள்ளார். இதனால் அஞ்சலி, மகேஸ்வரியைத் தவிர்க்க தொடங்கினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க:மருமகனை சுடுதண்ணீர் ஊற்றி கொன்ற மாமியார்.. திருச்சியில் நடந்தது என்ன?
இந்த நிலையில், மகேஸ்வரியும் அஞ்சலியும் மார்ச் 15ஆம் தேதி இரவு மாமிடிகட்டு என்னும் பகுதிக்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். இரவு 10 மணியளவில் மகேஸ்வரி ஸ்ரீனிவாஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அஞ்சலி தற்கொலை செய்து கொண்டதாகவும், இப்போது தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீனிவாஸ் ராமகிருஷ்ணாபூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறி அவர்களுடன் சம்பவயிடத்துக்கு விரைந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் அஞ்சலியும், லேசான காயங்களுடன் மகேஸ்வரியும் கிடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்ட போலீசார் மாஞ்சேரியல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவரது கழுத்தில் மிக ஆழமான காயம் இருந்ததால், இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதனிடையே அஞ்சலியின் பெற்றோர் ஸ்ரீனிவாஸ் மீதும் மகேஷ்வரி மீதும் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போலீசார் ஸ்ரீனிவாஸ் மற்றும் மகேஷ்வரியிடம் விசாரணை நடத்தியதில் மகேஷ்வரி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட தகவலில் ஸ்ரீனிவாஸ் உடன் அஞ்சலி நெருங்கி பழகுவதை கண்டித்து வந்ததாகவும், அவர் கேட்கவில்லை என்பதால் கோபத்தில் கொலை செய்ததாகவும் ஒப்புகொண்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:மனைவி, மாமியாரை கொலை செய்த இளைஞர்.. ஸ்மார்ட்போனால் பறிபோன உயிர்கள்.. சினிமாவை மிஞ்சும் கிரைம் ஸ்டோரி..