ராய்ப்பூர் :பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (டிச. 10) கூடிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சியை கைப்பற்ற 46 தொகுதிகள் பெரும்பான்மை தேவைப்பட்டதில், பாஜக 54 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தை நெருங்கிய போதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்தது. முதலமைச்சர் ரேசில் விஷ்ணு தியோ சாய், ராமன் சிங், அருண் சாவ், ஒ.பி. சவுத்ரி, ரம்விச்சர் நெதம், சரோஜ் பாண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இதனால் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் பாஜக உறுப்பினர்களிடையே கடும் குளறுபடி ஏற்பட்டது. இந்நிலையில், இன்று பாஜக சட்டமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இணை பொறுப்பாளர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விரைவில் விஷ்ணு தியோ சாய் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
தெலங்கானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ரஷ்டிர சமிதி கட்சியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. பெரும்பான்மையான இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி நடைபோட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :கேசிஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரேவந்த் ரெட்டி!