இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மாநில அரசு நடத்தும் செட் மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும் நெட் தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செட் மற்றும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
உயர்கல்வித்துறை பல்கலைக்கழகங்கள் மூலமாக நடத்தி வந்த செட் தகுதித் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி, வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன்பின்னர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும், ஏழை கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி மாணவர்கள், உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெற போராடி வரும் நிலையில், இனி பி.எச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணபிக்க முடியும் என்று தகுதி நிர்ணயித்திருப்பது அநீதியாகும்.