உத்தரகாண்ட்:பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு தீவிரம் காட்டிவருகிறது. நாட்டில் ஏற்கனவே ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுவோருக்கான சிவில் உரிமைகளை நிலைநிறுத்தும் தனிச்சட்டங்கள் நடைமுறையில் இருந்துவருகின்றன.
இந்த நிலையில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதமான சிவில் சட்டங்களை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே உள்ள மதங்களின் தனிப்பட்ட சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆகையால், இந்தப் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட வரைவுக்குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்துள்ளது.