லக்னோ :உத்தர பிரதேசத்தில் வரும் மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 14 ஆயிரத்து 684 வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் பிரதிபலிப்பாக காணப்படும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளன.
இதில் மாநிலத்தை ஆளும் பாஜக ஒரு படி முன்னே சென்று தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகிறது. ஏறத்தாழ 14 ஆயிரத்து 684 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 300 இடங்களை இஸ்லாமியர்களுக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. அதில் பெரும்பாலான இடங்களை பஸ்மந்தா என்கிற இஸ்லாமிய அமைப்புக்கு வழங்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதில் தலீத் மற்றும் பின்தங்கிய வகுப்பைச் இஸ்லாமியர்களை கொண்ட அமைப்பு தான் பசமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. 300 இடங்களை இஸ்லாமியர்களுக்கு வழங்குவதன் மூலம் மாநிலத்தில் ஏறத்தாழ 200 சிறுபான்மையின தலைவர்களை உருவாக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற இது வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. இந்த 300 இடங்களில் நகராட்சி மற்றும் நாகர் பஞ்சாயத்து தலைவர்களுக்கான 30 இடங்களும் அடங்கும் என கூறப்பட்டு உள்ளது. 300 சீட்டுகளில் பெரும்பாலும் மேற்கு உத்தரபிரதேசத்தில் வழங்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.