டெல்லி: மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் இடையேயான அரசியல் சலசலப்பின் உச்சகட்டமாக இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தில் கட்சியின் உரிமை கோரி வழக்குத்தொடர்ந்தன. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கட்சி விலகல், மற்றும் சிவசேனாவின் தலைமையின் தகுதி நீக்கம் தொடர்பான பல அரசியல் சட்ட கேள்விகளை எழுப்பி தாக்கல் செய்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 23) பரிந்துரை செய்தது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, அரசியல் சாசன பெஞ்ச் முன் வரும் வியாழக்கிழமை இந்த மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டது. இதனையடுத்து உண்மையான சிவசேனா என்று கருதி கட்சியின் தேர்தல் சின்னத்தை வழங்க வேண்டும் என்ற ஷிண்டே தரப்பினரின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.