மேற்கு அஸ்ஸாம் கொக்ராஜர் மாவட்டத்திலுள்ள அபயகுடி கிராமத்தில் ஜூன் 11ஆம் தேதி பிற்பகலில் தங்களது 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு மகள்கள் காணாமல்போனதாகவும், இருவரையும் கண்டுபிடித்துத் தருமாறும் அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அன்றிரவே அக்கிராமத்திலுள்ள ஒரு காட்டுக்குள் சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது கொலையா அல்லது தற்கொலையா என்று தீவிர விசாரணை நடந்திவருகின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று (ஜூன் 14) உயிரிழந்த சிறுமிகளின் வீட்டிற்குச் சென்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இது கொலையாக இருந்தால் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதையடுத்து, அவர் கூறியதாவது, "இந்தச் சம்பவத்தின் பின்னணியிலுள்ள உண்மையை காவல் துறை விரைவில் கண்டுபிடிக்கும். தற்போது சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் ஐந்து பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
இது ஒரு கொலை என்றால், காவல் துறையினர் நிச்சயமாகக் குற்றவாளிகளைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அது தற்கொலை என்றால், இதுபோன்ற ஒரு கொடூரமான சம்பவத்தின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.