ஹரித்வார்: அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் கும்பமேளா நடந்தது. இந்தக் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை போலியாக செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் சி ரவி மற்றும் சுகாதார அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் இரண்டு சிறப்பு விசாரணை குழுக்களையும் அமைத்து ஆட்சியர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நடந்த விசாரணையில் கோவிட் பரிசோதனையில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. அதாவது செல்போன் எண்கள், பெயர்கள் மற்றும் முகவரி தவறாக கொடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை வளர்ச்சி அலுவலர் சௌரப் கஹார்வார் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.
இந்தக் குழு கும்பமேளாவில் நடந்துள்ள கோவிட் பரிசோதனை ஊழல் குறித்து விசாரணை நடத்திவருகிறது. முன்னதாக, இவர்கள் கோவிட் பரிசோதனை செய்த அலுவலர்களிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த கோவிட் பரிசோதனை ஊழல்களை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன. உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: வீடு தேடிவரும் கங்கை!