தமிழ்நாடு

tamil nadu

ஒடிசா ரயில் விபத்து - தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்

By

Published : Jun 3, 2023, 1:03 PM IST

ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் தடம் புரண்டு பயங்கர விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோருக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்!
ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்!

சென்னை: ஒடிசாவில் உள்ள பாலசோர் அருகே மூன்று ரயில்கள் தடம் புரண்டு பயங்கர விபத்துக்குள்ளான நிலையில், இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீட்பு பணியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு விபத்தில் சிக்கியோரை போராடி மீட்டு வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு இரங்கலையும் வாழ்த்துகளையும் தமிழ்நாடு அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை ஒடிசாவுக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழ்நாடு அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டு பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமெனவும், இந்த கோர ரயில் விபத்தில் இறந்த தமிழ்நாட்டு பயணிகளுக்கு உரிய நிவாரணத் தொகையும், காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி: தனது இரங்கல்களையும் மற்றும் ஒடிசா மாநில அரசுடன் நம் தமிழ்நாடு அரசும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை:ஒடிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044 - 25330952, 044 -25330953 மற்றும் 044 - 25354771 தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்:ஒடிசா மாநிலத்துடன் தமிழ்நாடு அரசும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது என தெரிவித்த அவர், விபத்து குறித்த தகவல்களை அறிய தென்னக ரயில்வே தொடர்பு எண்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: ரயில் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமனி ரமாதாஸ்:ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், “அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? விபத்துக்கான காரணம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்று கோரமண்டல் ரயில் விபத்து குறித்து தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Ashwini Vaishnaw: ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறும் - ரயில்வே அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details