புது டெல்லி : டெல்லி ஜஹாங்கீர்புரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நேற்று (ஏப்.20) அங்குள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்த நிலையில், ஜாமியத் உலமா இ ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பிஆர் கவாய் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை அடுத்த இரு வாரங்களுக்கு நீடிக்கும் என உத்தரவிட்டனர்.