புவனேஸ்வர்:ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தால், ரயிலில் பயணிக்கவே சிலர் அச்சம் கொள்கின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு விரைவு ரயில் புறப்பட்டது. ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போது, B5 ஏசி பெட்டியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் பெட்டி முழுவதும் புகை பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் ரயில் பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்துக்குள் வந்தது. இதையடுத்து அச்சம் அடைந்த பயணிகள் தங்கள் உடைமைகளுடன் அலறியடித்தபடி வேக வேகமாக கீழே இறங்கினர். பின்னர் அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், புகையை கட்டுப்படுத்தினர். எனினும் அந்த பெட்டியில் இனி ஏற முடியாது என்றும், மாற்று பெட்டி வழங்குமாறும் பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். ரயிலில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியில்லை என கூறி, பயணிகள் சிலர் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து B5 பெட்டி பயணி ஒருவர் கூறுகையில், "ஏசியில் இருந்து புகை வருவதை கண்டேன். உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தேன். இந்த பெட்டியில் பயணம் செய்வதை நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை" என்றார்.