ஆந்திரா :சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ராஜதானி விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் அடுத்த காவாலி ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென ரயிலில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினர்.
இது தொடர்பாக ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்களில் ரயில் நின்ற நிலையில், பழுது சீர் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரயில் அதிகாரிகள் கூறுகையில், ராஜதானி விரைவு ரயிலின் பி-5 பெட்டியில் ஏற்பட்ட பிரேக் பழுது காரணமாக சக்கரத்தில் இருந்து புகை வந்ததாகவும், பழுது ஏற்பட்ட இடம் கண்டறியப்பட்டு விரைந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.